விருதுநகர்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ள திமுக நிர்வாகியாக இருந்தவர் உள்ளிட்ட 4 பேரை, 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜூனத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையிலும், மாணவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் சிபிசிஐடி போலீஸார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தினர். அதோடு, கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு அதிகாரியான டிஎஸ்பி வினோதினி, இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் நேற்று (திங்கள்கிழமை) மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமது ஆகியோரின் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீஸார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு சிலரது செல்போன்களையும் ஆய்வு செய்வதற்காக பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்டோரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை நடைபெற்றது. அப்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜூனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதையடுத்து, ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 6 நாள் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதியளித்தும், வரும் திங்கள்கிழமை மாலை 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
அதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டன. போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை நடத்தவும், அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ள ஏதுவாக தென் மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீஸார் விருதுநகர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 13 குழுக்களாக பிரிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.