`மென் இன் ப்ளாக்’ திரைப்படம் மூலம் நமக்குப் பரிச்சயமான ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகராகத் திகழும் இவர், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் `கிங் ரிச்சர்டு’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கட் ஸ்மித்தின் முடி உதிர்ந்த தலை குறித்து கேலி செய்யும் விதத்தில் பேசியிருக்கிறார். இதையடுத்து அவ்விழா மேடையிலேயே கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் அறைந்த காட்சி உலக அளவில் வைரலாகி வருகிறது.
Alopecia Areata என்கிற முடி உதிர்வு பிரச்னைக்கு ஜடா பிங்கட் ஸ்மித் ஆளாகியிருக்கிறார். அப்பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்றும், அதன் தன்மை மற்றும் சிகிச்சைமுறை குறித்தும் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் சுபாஷினி மோகனிடம் கேட்டோம்.
“அலோபேசியா என்பது முடி உதிர்வு பிரச்னைக்கான பொதுவான பெயர். இதில் பல வகைகள் இருக்கின்றன. உடலின் அனைத்துப் பாகங்களிலும் வளர்ந்துள்ள முடிகள் உதிர்ந்துவிடுவதற்கு Alopecia totalis/ universalis என்று பெயர். உடலின் சில இடங்களில் மட்டும் நாணயத்தின் அளவில் உண்டாகும் முடி உதிர்வுக்கு Alopecia areata என்று பெயர்.
இது தலையின் ஒரு சில இடங்களில் வரலாம், புருவங்களில், தாடியில் என எங்கு வேண்டுமானால் வரலாம். இப்பிரச்னையை நம் மக்கள் புழு வெட்டு என்று குறிப்பிடுவார்கள். உலக மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் இப்பிரச்னைக்கு ஆளாகு கின்றனர். Alopecia areata பிரச்னையைப் பொறுத்தவரை முடி உதிர்ந்த பகுதிகளில் மீண்டும் முடி வளர்வதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருக்கின்றன. உடல் முழுவதும் உள்ள முடிகள் உதிரும் Alopecia totalis/ universalis பிரச்னைக்கு உலக மக்கள் தொகையில் 0.8 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு ஆளானவர்களுக்கு மீண்டும் முடி முளைப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.
அலோபேசியாவும் ஒரு வகையான autoimmune disease தான். நம் உடலின் செல்களை வெளியில் இருந்து வந்த கிருமி என நினைத்து, நமது நோய் எதிர்ப்பு சக்தியே அழித்துவிடுவதுதான் auto immune disease. முடி வளரும் பகுதிகளில் உள்ள செல்கள் இக்காரணத்தால் அழிக்கப்படும் நிலையில் அங்கு முடி உதிர்ந்து போகிறது.
இப்பிரச்னையின் தன்மையைப் பொறுத்து இதற்கான சிகிச்சை வழங்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுக்குள் வைப்பதற்கான மாத்திரைகள் மற்றும் தேவைப்படும் நிலையில் குறைப்பதற்கான மாத்திரைகளும் வழங்கப்படும். Alopecia areata வைப் பொறுத்தவரையில் ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கையில் 3 – 6 மாதங்களில் குணமடைய வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. Alopecia totalis/universalis என்கிற உடல் முழுவதுமான முடி உதிர்வு பரவலாக இல்லை.
இப்பிரச்னைக்கு ஆளாகிறவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தியை சீரான முறையில் இயக்க ஸ்டீராய்டு கொடுக்கப்படும். மேலும் மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இப்பிரச்னையைப் பொறுத்தவரை நூறு சதவிகிதம் திரும்ப முடி வளரும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. மருத்துவ ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் இது ஆபத்தான நோய் கிடையாது. ஆனால், முடி உதிர்வுக்கு ஆளானவர்கள் மீதான பார்வை சமூக அளவில் மாற வேண்டும்” என்கிறார் சுபாஷினி மோகன்.