“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக, புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துபாய் வர்த்தக கண்காட்சி முடியும் தறுவாயில் அங்கு சென்றது ஏன்?” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வும் இதே விமர்சனத்தை முதல்வர் ஸ்டாலினின் பயணம் குறித்து முன் வைத்திருக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயிலிருந்து வெளியிட்டிருந்த வீடியோவில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மேற்கொண்டுள்ள துபாய் வெளிநாட்டுப் பயணத்தைக் குறித்து, விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், தனி விமானத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, துபாய் பயண நேரத்தில், விமான வசதி கிடைக்காத காரணத்தால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானத்திற்குக் கூட, திராவிட முன்னேற்றக் கழகம் தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை நான் முதலிலே தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமைச்சர் அளித்துள்ள விளக்கமும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அரசு முறைப் பயணத்தில் ஒரு கட்சியின் பணத்தில் முதல்வர் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏன் உருவானது. விமானத்துக்கான செலவை விடத் தனி விமானத்தின் செலவு அதிகம் எனும்போது ஏன் இந்த முயற்சி? என்ற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். முதல்வரின் தனி விமானப் பயணம் சர்ச்சை ஆவது ஏன் என்ற விசாரணையில் இறங்கினோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்றதை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதற்கான காரணம் என்ன என பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் கேட்டோம். “முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறார் என்பது உண்மையில் வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், அப்படி அரசு முறைப் பயணமாகச் செல்லும் போது குடும்பத்துடன் செல்ல வேண்டிய தேவை ஏன் உருவாகிறது. தனி விமானத்தில் முதல்வர் செல்வது புதிதல்ல. கொடைக்கானல் சுற்றுலா சென்ற போதும் தனி விமானத்தில்தான் சென்றார். இப்படிக் குடும்பத்தோடு தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று செல்வது எந்தளவுக்கு அரசு இந்த விஷயத்தில் மேம்போக்காக நடந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.. இதற்கெல்லாம் தி.மு.க-தான் செலவு செய்தது என்கிறார்கள். அரசுப் பயணத்துக்குத் தனிப்பட்ட ஒரு கட்சி செலவு செய்வது எப்படி நியாயமாக இருக்கும். கட்சி வேறு, ஸ்டாலின் குடும்பம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரச்னை ஏதும் வராது என்று கட்சிப் பணத்தில் பயணம் சென்றிருக்கிறார்கள். இப்போது சர்ச்சையானதும் அதை அப்படியே மாற்றிப் பேசுகிறார்கள்.
துபாயில் சென்று போடப்பட்ட முதலீடுகள் எல்லாம் எம்.ஓ.யூ. என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இப்படி ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் எவையெவை. போடப்பட்ட ஒப்பந்தங்களை எப்படி இங்கே செயல்படுத்தப்போகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் கவனிக்க வேண்டும்.” என்றார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடபு இணைச் செயலாளர், வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். “முதல்வரின் துபாய்ப் பயணம் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டதை மாற்ற வீண் பொருள் விரயத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் தனி விமானத்தில் முதல்வர் பயணம் செய்தார். அதுவும் அரசுப் பணத்தில் அவர் பயணம் செய்யவில்லை. இதைக் குடும்பப் பயணம் சென்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். குடும்பம் இருப்பவர் குடும்பத்தோடுதான் செல்வார்கள். இதில் விமர்சனம் செய்ய என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தில் ஒருவருக்கும் அரசுப் பணத்தில் எந்தச் செலவும் செய்யப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முதல்வரின் செலவினங்கள் மட்டுமே அரசு கணக்கில் எழுதப்படும். இவ்வளவையும் விளக்கிக் கூறியும்கூட அதே விமர்சனத்தைத் தொடர்ந்து வைக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் தி.மு.க மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியின்றி வேறொன்றும் இல்லை.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறித்தெல்லாம் நாம் இங்கே கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறோம். அதெல்லாம் மக்கள் கவனத்துக்கு சென்றுவிடாதபடி இந்த அவதூறை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே பரப்புகிறார்கள். ஏதாவது ஒரு வகையில் தி.மு.க-வைக் குறை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே விமர்சிப்பவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.” என விளக்கமளித்தார்.