பெங்களூரு:’ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை வாங்க கூடாது’ என மடாதிபதி, பா.ஜ., தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ‘ஹலால் பாய்காட்’ இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஹிந்து கோவில்கள் இருக்கும் பகுதிகளில் முஸ்லிம்கள் கடை வைக்க கூடாது என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது முஸ்லிம் கடைகளில் ‘ஹலால் கட்’ இறைச்சியை யாரும் வாங்க வேண்டாம் என்ற குரல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ‘ஹலால் பாய்காட்’ என்னும் இயக்கத்தை, மாண்டியா, ஷிவமொகா, சிக்கமகளூரு காளி மடத்தின் மடாதிபதி ரிஷி குமார் என்ற காளி சுவாமிகள், பெங்களூரு உல்லாள் உப நகரா ஹிந்து இறைச்சி கடையில் காளி பூஜை செய்து, நாட்டு கோழியை பலியிட்டு இயக்கத்தை துவக்கினார்.
அவர் கூறியதாவது:ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை உகாதி போன்ற பண்டிகைக்கு பயன்படுத்தக் கூடாது. எனவே ‘ஹலால் பாய்காட்’ இயக்கத்தை கர்நாடகா முழுவதும் துவக்க முடிவு செய்து உள்ளோம்.ஹிந்துக்கள் யாராவது இறைச்சி கடையை திறக்க முன் வந்தால், நாங்கள் உதவி செய்வோம். இலவசமாக இறைச்சி வெட்ட பயிற்சி அளிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வின் தேசிய பொது செயலர் சி.டி.ரவி கூறுகையில், ”முஸ்லிம்களின் ஹலால் முறையை எல்லாரும் ஒப்பு கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ”ஹலால் இல்லாத இறைச்சியை முஸ்லிம்கள் சாப்பிட்டால், ஹலால் உள்ளவற்றை ஹிந்துக்கள் சாப்பிடலாம்.
”ஹலால் என்பதே ஒரு விதமான ‘பொருளாதார ஜிகாத்’ தான். ”எனவே அதை புறக்கணிப்பதில் என்ன தவறு உள்ளது,” என்றார்.ஏற்கனவே மாநிலத்தில் ஹிஜாப் மற்றும் ஹிந்து கோவில்களில் பிற மதத்தவர் கடை துவக்க எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், புதிய குழப்பமாக, ஹலால் இறைச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை மக்கள் பார்க்கின்றனர்.
Advertisement