பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் அனுமதிக்கப்படாததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றமும், அதை ஆமோதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில அமைப்புகள் முறையீடு செய்துள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஹிஜாப் விவகாரத்தாலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் வீடுகளில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் தேர்வு மையங்களுக்குள் ஹிஜாப்பை அணிந்து செல்லவில்லை. ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் முதல் நாள் தேர்வை புறக்கணித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வெழுதாத மாணவிகளுக்கு ‘ஆப்செண்ட்’ போடப்பட்டுள்ளது. அதேநேரம் மறுதேர்வும் நடத்தப்படாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களோடு ஒப்பிடுகையில் 45.7 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.