கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் வசிக்கும் 30 வயது இளைஞர் ஒருவருக்குத் தெரியாத ஓர் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்துப் பேசியபோது எதிர்முனையில் யாரும் பேசவில்லை, எந்தச் சத்தமும் வரவில்லை. சற்று நேரத்தில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரின் எண்ணுக்கு, வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் அவரின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ இருந்துள்ளது.
உடனடியாகத் தங்களுக்குப் பணம் அனுப்பவில்லையென்றால், அந்த இளைஞருடன் தொடர்புடையவர்களுக்கு அந்த மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை அனுப்பிவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். அவரும் மிரட்டலுக்குப் பயந்து முதலில் 5,000 ரூபாய், பின்னர் 30,000 ரூபாய் கடைசியாக 20,000 ரூபாய் அனுப்பியுள்ளார். அதற்கு அடுத்தும் மிரட்டல் தொடர்ந்துள்ளதால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மோசடி கும்பலுக்கு இந்த இளைஞரின் தொடர்பு எண் எப்படிக் கிடைத்தது என்பது முதல் பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கு எண் வரை பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள். சமீபகாலமாக இது போன்ற மோசடி கும்பல்கள் அதிகரித்துவருகின்றன். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.