மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி திட்டம் வகுத்துக் கொடுக்க, காதலன் இந்த கொடூரச் செயல் செய்த பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகியுள்ளன
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் காதல் ஜோடி இருவர் வசித்து வந்தனர். காதலி வீட்டிற்கு வந்து செல்லும் 11 வயது சிறுமி மீது காதலன் ஆசை கொண்டுள்ளான். அதை தனது காதலியிடமும் கூறியுள்ளான். அந்த சிறுமியை ஒரு இரவு தன்னுடன் விட்டுச் சென்றால், புதிய மொபைல் போன் மற்றும் பணத்தைத் தருவதாக காதலியிடம் கூறியுள்ளான், மொபைல், பணத்தின் மீதான ஆசையில் சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து தனது காதலனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுவிட்டார் காதலி. யாருமில்லாத வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த இளைஞன்.
சிறுமி அதிக சத்தம் போட்டதால் அவரை மிகவும் மோசமாக தாக்கியுள்ளான். சிறுமி இறந்துவிட்டதாக கருதி மீனவர் குடியிருப்பில் தூக்கி வீசிச் சென்றுள்ளான். சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுமியின் உடலை கைப்பற்றினர் காவல்துறையினர். சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அவரை பாசிர்ஹாட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதிக இரத்தப்போக்கு இருந்ததால் சிறுமி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு அவரது சிகிச்சையை கண்காணித்து வருகிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயதேயான காதலன் ஹவுரா மாவட்டத்தில் உள்ள டோம்ஜூரில் இருந்து கைது செய்யப்பட்டான். அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM