சென்னை:
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.
தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக சென்னையில் நேற்று பேருந்து சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் இன்று 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என தொமுச பொருளாளர் நடராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.
முன்னணி நிர்வாகிகள் மட்டும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் வழக்கம் போல் மாநகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.
சென்னையில் மட்டும் மாநகர போக்குவரத்துக் கழகத்தால் நாள் ஒன்றுக்கு 3,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் உரிய நேரத்தில் அனைத்து பேருந்துகளும் புறப்பட்டு விட்டதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு – விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி