சென்னை: தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2நாள் நாடுதழுவிய போராட்டத்தின் 2வது நாளான இன்று தமிழ்நாட்டில், பேருந்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. 90 சதவிகித அரசு பேருந்துகள் இயங்குவதாக மாநில போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. ஆனால், வங்கி சேவை உள்பட பல சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, தனியார் மயம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி வங்கி உள்ளிட்ட பொது நிறுவனங்களின் சார்பில் வைஏலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
முதல் நாளான நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், ஆட்டோக்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் தனியார் பேருந்துகளில் தொங்கியவாறு பயணித்ததுடன், அதிக விலை கொடுத்து தனியார் வாகனங்களில் சென்றனர். சென்னையைப் பொறுத்தவரை புறநகர் ரயில்களிலும் மெட்ரோ ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதேபோல் வங்கி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் மற்றும் காசோலை பரிவர்த்தனை பணிகள் முழுமையாக முடங்கின.
போராட்டம் இன்று 2வது நாளாக தொடரும் நிலையில், 60 சதவீதப் பேருந்துகள் இயங்கும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தெரிவித்து உள்ளது. ஆனால், தமிழக அரசு 90 சதவிகிதம் பேருந்துகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று போதிய அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளான நிலையில், இன்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை 5 மணியில் இருந்து சென்னையில் மாநகர பஸ்கள் மற்றும் வெளிமாவட்ட பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
8மண்டலங்களில் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 98.2 சதவீத மாநகர பஸ்கள் இயக்கப்படு கின்றன. விழுப்புரம் மண்டலத்தில் 86 சதவீத பஸ்களும், சேலம் மண்டலத்தில் 96 சதவீத பஸ்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 96 சதவீத பஸ்களும், கோவை மண்டலத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் 17,268 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து மட்டும் 3,233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் 61 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாலை நேரங்களிலும் இதைபோல பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், முழுமையான போக்குவரத்து இல்லை, பாதிய அளவே பேருந்துகள் இயங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.