விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், எரி பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்தது.
அதன்படி நேற்று முதல் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 67 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என்றும் 33 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 60 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இன்று வழக்கம் போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாமல் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இயல்பான பயணிகள் வரத்து இல்லை என தகவல். திருச்சியில், அரசு பேருந்துகள் நேற்றை விட குறைவாகவே இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை, அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.