இரண்டு நாட்களுக்குள் 6 அண்டை நாடுகளின் தலைநகரங்களில் ரஷ்ய படைகளை தம்மால் களமிறக்க முடியும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 35 நாட்களை கடந்துள்ள நிலையில், ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக தமது இறுக்கத்தை குறைத்து வருவதாகவே கூறப்படுகிறது.
இரு தரப்பும் கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளன. உக்ரைன் தரப்பில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளதுடன், கட்டுமானங்கள் மொத்தமும் ரஷ்ய குண்டுவீச்சில் கடுமையாக சேதப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன், போலந்து, லாட்வியா, லித்துவேனியா, எஸ்டோனியா, ருமேனியா ஆகிய நாடுகளில் 48 மணி நேரத்திற்குள் ராணுவத்தை குவிக்க தம்மால் முடியும் என உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், குறித்த சம்பவம் 2014ல் நடந்ததாகவும், அப்போதே அவர் உக்ரைன் படையெடுப்புக்கு திட்டமிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் நோக்கத்தை கைவிடமும் புடின் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புகளை குவித்து வந்த சூழலில், உக்ரைன் தலைநகரை இரண்டே வாரத்தில் தம்மால் கைப்பற்ற முடியும் என விளாடிமிர் புடின் சூளுரைத்ததாக வெளியாக தகவலை அடுத்தே, 2014ல் விடுத்த எச்சரிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டத்தில் ரஷ்யாவின் போக்கை கட்டுப்படுத்த தவறினால், ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என அப்போதே பொரோஷென்கோ அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.
ஆனால், அவ்வாறான ஒரு கருத்தை விளாடிமிர் புடின் முன்வைக்கவில்லை என்றே ரஷ்யா மறுத்துள்ளது.