புதுடில்லி: இந்தியா இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள தீவுகளில் காற்றாலைகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியா வசமாகியுள்ளது.
இந்தியாவை ஒட்டியுள்ள இலங்கை புவிசார் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே இலங்கை மீது எப்போதும் சீனா கண் வைத்துள்ளது. துறைமுக திட்டம், உள்கட்டமைப்பு திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவும் போட்டிப்போட்டு இலங்கையில் பல்வேறு திட்டங்களை கைப்பற்றி வருகிறது.
தற்போது அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவுகிறது. அந்நியச் செலாவணி இருப்பை உயர்த்தவும், உணவு தாணியங்கள், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவும் இந்தியா, சீனாவிடம் அதிக கடன்களை கேட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் அருகே உள்ள நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் சுமார் 100 கோடி ரூபாயில் காற்றாலைகள் அமைக்கும் திட்டம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி செய்ய இருந்தது. இந்திய கடற்கரைக்கு அருகே சீனாவின் நடவடிக்கை இருப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் அத்திட்டத்தை இந்தியா நிறைவேற்றும் ஒப்பந்தத்தை பெற்றார். இலங்கையின் இம்முடிவுக்கு சீன தூதர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற செயல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை செய்தியை அனுப்பும் என எச்சரித்துள்ளார்.
Advertisement