அமெரிக்காவில் 10 மில்லியன் வசூலைக் கடந்த 'ஆர்ஆர்ஆர்'
இந்தியத் திரைப்படங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வெளியிடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க வசூல் கிடைத்து வருகிறது. 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்தியப் படங்களை வெளிநாட்டினரும் ரசிப்பதாகச் சொல்கிறார்கள்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அடுத்த பிரம்மாண்டமான வெளியீடாக அமெரிக்காவில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியிடப்பட்டது. அங்கு 1150 இடங்களில் உள்ள தியேட்டர்களில் படம் வெளியானது. பிரிமீயர் காட்சியைப் பார்ப்பதற்கே ரசிகர்கள் திரண்டனர். அதன் மூலம் மட்டுமே 3 மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் கிடைத்தது.
இப்போது கடந்த 5 நாள் வசூலில் 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்துள்ளது. இதுவரையில் இந்தியப் படங்களில் 'பாகுபலி 2' படம் மொத்தமாக 20 மில்லியன் வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 'டங்கல்' படம் 12 மில்லியன் வசூலுடன் உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் 'டங்கல்' வசூலைக் கடந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், 'பாகுபலி 2' வசூலான 20 மில்லியனைக் கடக்குமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.