முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், 100 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கூறினார். மேலும், 6 மணிநேரம் கமலாலயத்தில் இருக்கிறேன், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார்.
இதையடுத்து, திமுகவின் அமைப்புச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை கைதாக முடிவு செய்துவிட்டார். அவரை உரிய நேரத்தில் அனுப்பி வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேவைப்படும்போது திமுகவில் பாதி பேர் ஜெயிலில் இருப்பார்கள். இ.டி. (அமலாக்கத்துறை) கேஸ்ல திமுகவில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியலில் குறிப்பாக திமுக நேரடியாக கருத்தியல் காரணத்தில் யாரையும் எதிர்க்க முடியவில்லை என்றால், அவர்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது அவர்களுக்கு கைவந்த கலை. இது புதிது கிடையாது. கர்மவீரர் காமராஜரை அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை தமிழகமே பார்த்தது. அதற்கு பிறகு எம்.ஜி.ஆரை எப்படி பேசினார்கள் என்பதை தமிழகமே பார்த்தது. திமுகவினரைப் பொறுத்தவரை பொய் சொல்வதில் வல்லவர்களாகி விட்டார்கள். அரசியலில் கருத்தியல் ரீதியாக எங்களுடன் மோத முடியாமல், சட்டசபைக்குள் பாஜக சட்டசபைத் தலைவர் நயினார் நாகேந்திரன், எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜக தொண்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் இப்போது பொய்யை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் ஒரு கட்டுக்கதை, அதற்கு பதில் சொன்னால் அதற்கு ஒர் கட்டுக்கதை என்று அதனால் எனக்கு எத்தனை முறை பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. திமுக அமைப்புச் செயலாளர் அவர்கள், அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருக்கும்போது, சித்தராமையா ஆட்சியைக் கலைத்தார் என்று என்னவோ சொல்லியிருக்கிறார் எனக்கு தெரியவில்லை. எனக்குத் தெரிந்து சித்தராமையாவோடு 5 வருட காலம் முழுமையாக பணியாற்றி, அவரிடம் 3 மாவட்டத்துடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து அவருடைய ஆட்சி 5 வருடம் முழுமையாக இருந்து அவருடைய ஆட்சி தேர்தல் ஆணையம் மூலம் வழக்கமாக நடக்கக்கூடிய தேர்தல் மூலம் அடுத்த தேர்தல் நடந்து அடுத்த தேர்தலில் ஹெச்.டி குமாரசாமி முதலமைச்சராக வந்தார். அவரிடம் அன்பைப் பெற்று, நான் ராஜினாமா கொடுக்கும்போது 24 மணி நேரம் அடம்பிடித்து வற்புறுத்திய பிறகு ராஜினாமா கடிதத்தை வாங்கிக்கொண்டார். இதில் நம்முடைய நண்பர்கள் புதுசு புதுசா கதைவிடுகிறார்கள். அதனால், நீங்கள் எத்தனை கதை சொன்னாலும் நாங்கள் உங்களை கேள்வி கேட்கப்போவதை விடப்போவதில்லை.
அதனால், நீங்கள் செய்கின்ற தவறுகளை எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் தொடர்ந்து மக்கள் மன்றத்திலே வைத்துக்கொண்டிருப்போம். அது பி.ஜி.ஆராக இருந்தாலும் சரி, துபாய் பயணமாக இருந்தாலும் சரி, எங்களுடைய கேள்விக் கணைகள் வந்துகொண்டே இருக்கும். எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ, அவ்வளவு பொய் சொல்லிகிட்டே இருங்க. அதற்கான பதில் காலம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அண்ணாமலையின் பதவி பறிபோக உள்ளது என்று எங்களுக்கு டெல்லியில் சொன்னார்கள். எங்கள் பாஜகவின் அழகே நிரந்தரமான தலைவர் இருந்தால் இந்த கட்சி வளராது என்று நினைக்கக்கூடிய ஒரு கட்சி. திமுகவில் மட்டும்தான் நிரந்தரத் தலைவரை வைத்துக்கொண்டு நீங்கள் ஜனநாயகத்தை சிந்தித்துக்கொண்டிருக்கலாம். பாஜகவின் அழகே ஒரு சாமானிய மனிதனைக்கூட தலைவராக உயர்த்தி பாரதமப் பிரதமராக உயர்த்தக்கூடிய சக்தி இருக்கிறது. அது அறிவாலயம் வாசலில் தினமும் பெட்ஷீட் தலையணை போட்டு தூங்குகிறவர்களுக்கு தெரியாது. காலங்காலமாக ஒரு குடும்பத்துக்கு கொத்தடிமைகளைப் போல சேவை செய்கிறவர்களுக்கு தெரியாது. பாஜகவின் உறுப்பினருக்கு மட்டும்தான் நான் என்ன பேசுகிறேன் என்று தெரியும்.
இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அடுத்த தலைவர்களாக வரவேண்டும், அடுத்த பிரதம மந்திரிகளாக வர வேண்டும். தமிழக முதல்வராக வர வேண்டும் என்றால் நமது அண்ணன் ஆ.எஸ். பாரதி என்ன சொன்னார்களோ அதை ஏற்றுக்கொண்டு பாஜக பக்கம் வாருங்கள். இங்கே வந்தால் மட்டும்தான், அடுத்த தலைவர் பதவிக்காக என்னுடைய பதவி காலியாகும், என்னுடைய பதவி பறிபோகும். அடுத்த இன்னொருத்தர் கிடைப்பார். அது நீங்களாகவும் இருப்பீர்கள். அவர் முடித்த பிறகு இன்னொருத்தர் கிடைப்பார். அதுதான் இந்த கட்சியினுடைய அற்புதம், அதுதான் இந்த கட்சியினுடைய சித்தாந்தம். அவர் சொன்னதுக்கு இதுதான் பதில்.
நான் 7 மணி நேரம் உகார்ந்திருந்தேன். ஒருவேளை போலீஸ் வரும்போது சென்னை டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டார்களோ என்று காத்திருந்தேன். சென்னையில் பயங்கர டிராஃபிக். நான் 7 மணி நேரம் உக்கார்ந்திருந்தும் அவர்கள் வரவில்லை. ஏனென்றால், வர முடியாது. ஒரு மனிதன் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கான முகாந்திரம் இருக்க வேண்டும். ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரத்தைத் தாண்டி முகாந்திரம் இருக்க வேண்டும். மனசாட்சி இருக்க வேண்டும். என்னதான் கட்டுக்கதை கிளப்பினாலும்கூட ஒரு ஆதாரம்கூட, ஒரு கடுகள ஆதாரம்கூட அவர்கள் வாழ்க்கையில் கிடைக்காது. திமுக குறிப்பாக என்னுடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டார்கள். ஊர்ல விவசாய நிலத்தில் வேலி சரையாக போட்டிருக்கிறேனா. வேலி அடுத்த நிலத்தில் போயிருக்கிறதா? ரோடு பக்கத்தில வேலி இருக்கா என்று எல்லாத்தையும் அளந்து ஆச்சு. என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு என்னதான் பார்த்தாலும் ஒரு கடுகுகூட கிடைக்காது. உங்களுடைய நேரத்தை வீணாக்குவது என்றால் வீணாக்கிக்கொண்டே இருங்கள். ஏனென்றால், என்னுடைய வாழ்க்கை அப்படிப்பட்ட வாழ்க்கை. வாழ்கின்ற வாழ்க்கை அப்படிப்பட்ட வாழ்க்கை. உங்களால் எதுவுமே கண்டுபிடிக்க முடியாது. நான் ஓபன் சேலஞ்ச் விடுக்கிறேன். இந்த தைரியம் பாஜகவில் இருந்தால் மட்டும்தான் வரும். தவறு செய்யவில்லை என்கிற தைரியத்தில் பேசுகிறோம்.
தொடர்ந்து ஆர்.எஸ். பாரதி அண்ணன் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கலாம். அதில் ஆதாரம் இருக்காது. இதே மாதிரி பேசலாம். ஆனால், எங்களுடைய அடுத்த கேள்விகள் இதைவிட வலிமையாக இருக்கும். கனமாக இருக்கும் என்று கூறினார்.
தேவைப்படும்போது அண்ணாமலையை அனுப்பி வைப்போம் என்று ஆர்.எஸ். பாரதி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “தேவைப்படும்போது திமுகவில் பாதிபேர் உள்ளே இருப்பார்கள். அதையும் சொல்கிறேன். இ.டி. கேஸ்ல திமுகவின் சிட்டிங் அமைச்சர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேளுங்கள். 2ஜி கேஸ்ல எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேளுங்கள். நீங்கள் தேவைப்படும்போது, ஒரு அண்ணாமலையைக் கைது செய்யலாம். தேவைப்படும்போது பாதி திமுக ஜெயிலில் இருக்கும். அதையும் ஆர்.எஸ். பாரதி உணர்ந்து கொள்ள வேண்டும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. இ.டி. (அமலாக்கத்துறை) கேஸ்ல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர் தமிழகத்தில் அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் முக்கியமான ஒரு அமைச்சருக்கு இ.டி கேஸ்ல ஒரு அமைச்சருக்கு சம்மன் வந்திருக்கிறது. இது ஊடகத்தில் வரவில்லை. அந்த அமைச்சருக்கு சம்மன் வந்திருக்கிறது. அந்த அமைச்சரும் போய் நான் இன்னும் 2 வாரத்தில் வந்து ஆஜராகுகிறேன் என்று தேதி கேட்டிருக்கிறார். அதனால், ஆர்.எஸ். பாரதிக்கு, நம்ம அரசு வேற மாதிரி அரசு. சும்மா ஒட்டிப் பார்த்துட்டு, உரசிப்பார்த்துட்டு போக எல்லாம் இங்க அரசியல் செய்ய வரவில்லை. பேசினால், அந்த பேச்சுக்கு பின்னால் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அதனால், நீங்கள் உரசிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் உரசிப் பார்க்கலாம்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“