விழுப்புரம்: திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்ல முயன்ற கணக்கில் வராத ரூ.40 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். ஆதிதிராவிட நலத் துறையில் காலியாக உள்ள சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு திருச்சி பகுதியில் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்துடன் ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் சரவணகுமார் சென்னைக்கு செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஊழல் தடுப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட கார் விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறதா என கண்காணித்து வந்தனர். அதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மடப்பட்டு பகுதியில் அந்தக் கார் வந்தபோது ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் ஒரு கட்ட பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக துணை ஆட்சியர் சரவணக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் மணி ஆகியோருடன் போலீஸார் விசாரித்தனர். இருப்பினும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் காரில் மொத்தம் ரூ.40 லட்சம் பணம் திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இருப்பினும் இந்த பணம் யாருக்கு, எதற்காக கொண்டு செயல்படுகிறது என்பது தெரியவில்லை. கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்ததால் அந்த ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு காரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.