திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் காரில் கொண்டு சென்ற 40 லட்சம் ரூபாய் பணம் விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் சரவணக்குமார். இவர் குறிப்பிட்ட சில பணிகளுக்காக லஞ்சமாக பெறப்பட்ட லஞ்ச பணத்தை, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் எடுத்து செல்வதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இந்த தகவலை உடனடியாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், விழுப்புரம் அருகே உள்ள கெடிலம் பகுதியில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் கண்காணித்து வந்தனர்.
விழுப்புரம் அருகே கெடிலம் பகுதியில் குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அந்த காரில் இருந்த திருச்சி ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அந்த காரில் சோதனை செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சரவணக்குமார் வந்த காரில் சோதனை நடத்தியதில், காரில் இருந்த பை ஒன்றில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பணத்தைக் கைப்பற்றி கணக்கிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதில் சுமார் 40 லட்சம் ரூபாய் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த பணத்தைப் பறிமுதல் செய்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை துணை ஆட்சியர் சரவணக்குமார் மற்றும் உடன் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை துணை ஆட்சியர் சரவணக்குமார் காரில் இந்த பணம் எப்படி வந்தது, எதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? யாரிடம் கொடுக்க இந்த பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“