ஆந்திரா – அரசு சார்பில் ஏப்ரல் முதல் சினிமா டிக்கெட் விற்பனை
இந்தியாவில் ஹிந்தி சினிமாவுக்குப் பிறகு பெரிய மார்க்கெட் தெலுங்கு சினிமாவுக்குத்தான் உள்ளது. தெலுங்கு சினிமா வெளியாகும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சினிமா தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம். தெலுங்கு சினிமா ரசிகர்கள் சினிமாவை ஒரு கொண்டாட்டமாக இன்று வரை ரசித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சினிமா துறையில் சில பல மாற்றங்களைச் செய்ய அதிரடியில் இறங்கியது. கடந்த வருடம் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்தது. அதிக வசூல் செய்யும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்கவில்லை. அதன்பின் சினிமா துறையைச் சேர்ந்த பலரும் மீண்டும் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு இம்மாதத் துவக்கத்தில் மீண்டும் டிக்கெட் விலை திருத்தி அமைக்கப்பட்டது.
கடந்த வருடம் செய்த மாற்றங்களிலேயே ஆன்லைன் மூலம் அரசு சார்பில் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்ற அறிவிப்பும் இருந்தது. அது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாம். இதற்காக டெண்டர் அறிவிப்பு விடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சில முன்னணி நிறுவனங்கள் அதில் பங்கேற்க உள்ளது. தனியார் ஆன்லைன் இணையதளங்கள் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 30 ரூபாய் 40 ரூபாய் வரையில் சேவைக் கட்டணங்கள் வாங்குகிறது. அது அரசு சார்பில் நடத்தப்பட உள்ள இணைய சேவையில் இருக்காது என்று தெரிகிறது.
மேலும், அனைத்து டிக்கெட்டுகளுமே ஆன்லைன் மூலமே விற்கவும் வழி செய்யப்படுகிறதாம். தியேட்டர்களில் டிக்கெட் விற்றாலும் அந்த இணையதளம் மூலம்தான் விற்க வேண்டுமாம். இதன் மூலம் 'பிளாக் மார்க்கெட்டில்' டிக்கெட் விற்கப்படுவது முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்கிறார்கள். இதனால், சினிமா வியாபாரத்தில் வெளிப்படைத் தன்மையும் வர வாய்ப்புள்ளது. கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்கப்படுவது தடுக்கப்படுவதால் அரசுக்கு ஏற்படும் இழப்பும் அப்படியே குறைந்துவிடும்.
சரியாகக் கணக்குக் காட்டாத தியேட்டர்காரர்களால் படத் தயாரிப்பாளர்களுக்கும், அரசுக்கும் ஏற்படும் இழப்பு என்பதே இருக்காது. இது தெலுங்கு சினிமாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் சேவை முறை நடைமுறைக்கு வரும் என்கிறார்கள். இது போல, தமிழகத்திலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதே இங்குள்ள சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.