லாஸ் ஏஞ்சல்ஸ்:ஆஸ்கர் விழா மேடையில், ‘ஹாலிவுட்’ நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்ததற்காக, அவரிடம் நடிகர் வில் ஸ்மித், 53, மன்னிப்பு கோரினார்.
‘ஹாலிவுட்’ படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. சிறந்த நடிகருக்கான விருதை, கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித் பெற்றார்.இவருடன் இவரது மனைவி ஜடா பிங்கெட்டும் விழாவுக்கு வந்திருந்தார்.
‘அலோபீசியா’ என்ற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜடா பிங்கெட் தலையில் முடி கொட்டி விட்டதால், அவர் மொட்டை அடித்த தோற்றத்தில் உள்ளார். விழா மேடையில், ‘ஹாலிவுட்’ நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் பேசும்போது, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலையை உருவ கேலி செய்யும் விதமாக பேசினார். ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையேறி நடிகர் கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.
இந்நிலையில் நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட அறிக்கை:ஆஸ்கர் விழா மேடையில் என்னுடைய செயல் மன்னிக்க முடியாதது. என்னைப் பற்றி கேலியாக பேசியிருந்தால், அது என் பணியின் ஒரு பகுதி என கருதி இருப்பேன். என் மனைவியின் மருத்துவ குறைபாட்டை வைத்து கேலி பேசியதால் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.என்னை மன்னித்துவிடு கிறிஸ். நிதானம் இழந்து, தவறு செய்துவிட்டேன்.
நான் எப்படிப்பட்ட மனிதனாக இருக்க விரும்புகிறேனோ, அதை என் செயல் பிரதிபலிக்க வில்லை. இதற்காக வெட்கப்படுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement