புதுடெல்லி: இலங்கை தலைமையில் இன்று நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், ‘ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தற்போதைய சூழல்களால் சர்வதேச ஸ்திரத்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். பிம்ஸ்டெக் நாடுகள் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதனால் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு அவசியமாகிறது. இந்தியா சார்பில் பிம்ஸ்டெக்கின் செயல்பாட்டு பட்ஜெட்டுக்காக 1 மில்லியன் டாலர் நிதியை வழங்கும். பிம்ஸ்டெக் நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான இணைப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பின் பாலமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. 1997ம் ஆண்டு ஒன்றிணைந்து அடைந்த இலக்குகளை அடைய புதிய உற்சாகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்’ என்றார். இந்த மாநாட்டில் இந்தியா, பங்களாதேஷ், பூடான், நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் மோடியின் பிம்ஸ்டெக் உரை முக்கியத்துவம் பெறுகிறது.