கொழும்பு-இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் வெட்டு நேரம், 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.எரிபொருள் பற்றாக்குறையால், நீர் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மின்சார வினியோகம் தடைபட்டு, தினமும் ஏழு மணி நேர மின் வெட்டு அமலில் இருந்தது.இந்நிலையில், அந்த மின் வெட்டு நேரத்தை, 10 மணி நேரமாக, இலங்கை அரசு நேற்று உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து, இலங்கை அரசின் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜனக ரத்நாயகா நேற்று கூறியதாவது:எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நீர் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை உள்ளது.இதனால், 750 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின் வெட்டு நேரம், 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement