டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள பினெய் ப்ராக் எனும் பகுதியில், நேற்று (மார்ச் 29) இரவு அடையாளம் தெரியாத நபர் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த நபர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அங்குள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில், பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து, உடனடியாக அங்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாலஸ்தீன் நாட்டின் மேற்கு கரையைச் சேர்ந்தவர் என அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நப்தாலி பென்னட், அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
Advertisement