உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 35-வது நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுக்கள், தங்களின் அமைதி பேச்சுவார்த்தையைத் துருக்கி நகரமான இஸ்தான்புல்லில் நேற்று நடத்தினர். ஏற்கெனவே ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், இருதரப்பினரும் எதிர்பார்த்த முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததால், மீண்டும் 5 முறையாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின்(Alexander Fomin), “பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான நிலைமைகளை உருவாக்குவதற்கும், மேலும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்வதற்கும் கையொப்பமிடுவதற்கும் கீவ் மற்றும் செர்னிகிவ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இச்செய்தி வெளியாகிய பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனியர்கள் அப்பாவி மக்கள் அல்ல. இந்த 34 நாள்கள் போரில் உக்ரேனியர்கள் ஏற்கனவே நிறைய கற்றுக்கொண்டனர். டான்பாஸில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்த போரில், அவர்கள் நம்பக்கூடிய ஒரே விஷயம் உறுதியான முடிவு” என கூறினார்.