சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி எனக் கூறி, உப்புக் கரைசலை செலுத்திய டாக்டர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் ஜிப்சன் குவா, கொரோனா தடுப்பூசிக்கு எதிரான ‘ஹீலிங் தி டிவைட்’ என்ற அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பின் தலைவர் ஐரிஸ் கோஹ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்.
இவர் அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றி, கொரோனா சிகிச்சைக்காக ஜிப்சன் குவாவின் நான்கு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி உள்ளார். ஜிப்சன் குவா, தன்னிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோரிடம், உப்புக் கரைசலை செலுத்தி ஏமாற்றியுள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை செய்ததாகவும், தடுப்பூசி போட்டதாகவும், சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில் மெஹரஜூன்னிசா என்ற பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்துகையில், ஜிப்சன் குவா செய்த மோசடியை சுகாதார அமைச்சகம் கண்டுபிடித்தது.இதையடுத்து ஜிப்சன் குவா, ஐரிஸ் கோஹ் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.தற்போது ஜாமினில் வந்துள்ள ஜிப்சன் குவா, ஒன்றரை ஆண்டுகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அவரது மருத்துவமனைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்வதற்கு அளித்த அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement