தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை மையமாகக்கொண்டு, இணைய வழியாக (Online) இடம்பெற்ற “வங்காள விரிகுடா சார்ந்த பல்தரப்பு தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு” (பிம்ஸ்டெக்) அமைப்பின் ஐந்தாவது அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இந்த ஆண்டு மாநாடு இலங்கையில் நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வங்காள விரிகுடாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தாய்லாந்தின் பேங்கொக் தலை நகரத்தில் 1997 ஜூன் மாதம் பிம்ஸ்டெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, மனித வள மேம்பாடு, விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்வி, தொழில் மற்றும் தொழிநுட்ப துறைகளுக்காக பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவதும் பொருளாதாரம், சமூகம், தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் செயற்பாட்டு ரீதியான மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பைபும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்ற சுற்றுலா கைத்தொழிலானது பிம்ஸ்டெக் நாடுகளுக்கு பாரிய ஊக்கத்தை அளிக்கிறது. எனவே சுற்றுலா கைத்தொழில் தொடர்பில் பிம்ஸ்டெக் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வங்காள விரிகுடா பிராந்தியம் உலக உறவுகளுக்கும் வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் சர்வதேச கப்பல் பாதைகள் உலகப் பொருளாதாரத்தின் இதயம் செயற்படுவதற்கு உதவும். கடல் பிராந்தியத்தைப் போன்று நாடுகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தணிக்க கடல்சார் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான புலனாய்வுத் தகவல் பகிர்வு மற்றும் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி அவர்கள், இதன் மூலம் அனைத்து நாடுகளின் நலனுக்காக பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
பிம்ஸ்டெக் செயலகம் வெற்றிகரமாக செயற்பட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார்.
அமைப்பின் நாடுகளுக்கு இடையே செயற்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த தேவையான சட்ட கட்டமைப்புகளை வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விவசாயம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்கு பெறுமதி கூட்டுவதன் மூலம் இந்தத் துறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்.
உலகத் தொற்றுநோயைப் போலவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இப்பிராந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருக்க வேண்டும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தெரிவித்தார். அதேபோன்று அமைப்பின் 14 துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை முழுமையாக செயற்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஷேக் ஹசீனா அவர்கள் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பூட்டான் பிரதமர் வைத்தியர் லோட்டே டிஷெரின் அவர்கள், பொதுமக்களுக்கு இலவச அல்லது மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா அவர்கள், தீவிரவாத செயல்களை ஒடுக்கவும், மனித கடத்தல் மற்றும் பண மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேம்பட்ட தொழிநுட்பம் மற்றும் ஒத்துழைப்பு தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.
மியான்மர் வெளிவிவகார அமைச்சர் வுன்னா முன்க் இல்வின் அவர்கள், நிலவுகின்ற சவால்களுக்கு மத்தியில், உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு உதவ தாய்லாந்து தயாராக உள்ளது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அவர்கள் தெரிவித்தார்.
பிம்ஸ்டெக் சாசனத்தை நிறைவேற்றிக்கொள்வது, பல சட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் மற்றும்
2022 – 2023ஆம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக்கின் தலைமைப் பதவியை தாய்லாந்திடம் ஒப்படைப்பதும் இந்த மாநாட்டுக்கு இணையாக இடம்பெற்றன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
30.03.2022