கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் ஒரு, ‘தினம்’ இருப்பது போல, புகையிலை தடுப்புக்கும் ஒரு தினம் இருக்கிறது. அது மே 31.
‘தந்தையர் தினம்’, ‘தாயார் தினம்’ எல்லாம் தேவையா? வருடம் முழுதும் தாய், தந்தையை மதிக்க வேண்டியதில்லையா?’ என்கிற குரலும் எழுகிறது அல்லவா? அதைப்போல, புகையிலை தடுப்பை தினமும் நினைக்க வேண்டியது அவசியம். காரணம், ‘உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.
புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்புக்கள் ஏற்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடம் வகிப்பதாகச் செய்தி வந்திருப்பது இந்த விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மருத்துவர் சரவணன், “உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புக்களில் பத்தில் ஒன்று புகைப்பழக்கத்தினால் ஏற்படுகிறது. அதிலும், சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்று, உலக நோய் பாதிப்புக்கள் குறித்து தி லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகையிலையால் உயிர்ப்பலிகள் ஏற்படுவது மட்டுமல்ல. வாழும்போதே உயிரற்ற உடலாக நடமாட வேண்டியிருக்கிறது. 195 நாடுகளில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மூளை மந்தமாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆதாவது, ‘புகைப்பிடித்தால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது’ என்று புகைப் பிரியர்கள் நினைப்பது தவறு. ஆரம்பத்தில் அப்படி தோன்றலாம். போகப்போக, இருக்கும் சுறுசுறுப்பையும் அழித்துவிடும் புகைப்பழக்கம்” என்கிறார் மருத்துவர் சரவணன்.
புகையிலை பழக்கம்
மேலும் அவர், “புகையிலை மெல்லும்போது, சிகரெட் புகைப்பதைவிட மூன்று மடங்கு அதிகமான நிகோடின் உடலுக்குள் செல்கிறது. இதனால், கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் உள்ளிட்ட இடங்களில் வெள்ளைத்திட்டுக்கள் உருவாகி, நாளடைவில் புற்றுநோயாக மாறும். தவிர, சொரியாஸிஸ், கண்புரை, தோல் சுருக்கம், காது கேளாமை, பற்சிதைவு, சுவாசக்குழாய் அடைப்பு, எலும்புப்புரை நோய், இதயநோய், வயிற்றுப்புண்கள், விரல்கள் நிறமாற்றம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு, ஆண்மைக் குறைவு, பியூஜெர்ஸின் நோய் என பல பாதிப்புகள்” ஏற்படும் என்கிறார்.
வாழ்நாளைக் குறைக்கிறது!
முன்கூட்டியே மரணம் நிகழச் செய்வதில் புகைப்பழக்கம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகில் 4இல் ஒருவர் புகைபழக்கத்திற்கு அடிமையாக உள்ளார். இவர்களில் 3இல் ஒருவர் உயிரிழப்பது தெரியவந்திருக்கிறது. ஒவ்வொரு சிகரெட்டும், வாழ்நாளின் ஐந்து நிமிடங்களை ஊதித்தள்ளிவிடுகிறது.
உலகம் முழுவதும் 110 கோடிப் பேர் புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். இவர்களில் 50 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள். இந்த மரணங்களுக்கு புகையிலையால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது முக்கிய காரணமாகிறது.
தவிர, ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலையால் மட்டுமே மரணமடைகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 9 லட்சம் பேருக்கு புகைப்பழக்கம் கிடையாது. புகைப்பவரின் அருகிலிருப்பதால் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கிச் செல்லும் அப்பாவிகள் இவர்கள்.
ஒருவர் புகைப்பிடிக்கும்போது, உள்ளே இழுக்கும் புகையைவிட வெளியே விடும் புகையே அதிகம். இரண்டிலுமே ஏராளமான நச்சுப் பொருள்கள் இருக்கின்றன.
இந்திய நிலை!
இங்கு சுமார் 35 சதவீதம் பெரியவர்கள் புகையிலையையே ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்திவருகிறார்கள். ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 15 வயதிற்கு முன்பாகவே புகையிலையை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். நாள்தோறும் சுமார் 5500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், புதிதாகப் புகைச்சுருளுக்குள் நுழைகிறார்கள்.
புகை(யிலை)யில் அப்படி என்னதான் இருக்கிறது?
புகையிலையில் கலந்துள்ள நிகோடின் பற்றிப் பலருக்கும் தெரியும். ஆனால், அது மட்டுமல்ல.. கார்பன் மோனாக்சைடு, ஆர்சனிக் , ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 4,000க்கும் அதிகமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன. இவற்றில் 69 வகை ரசாயனங்கள் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை உடையவை.
எப்படி விடுபடுவது?
காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசத்தைக் கலந்து அருந்த வேண்டும். சுவைக்காக சிறிது தேன் சேர்க்கலாம். புகைப்பிடிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது இஞ்சி, நெல்லிக்காய் சாறு அருந்தலாம். இவையெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்கிற வேட்கையைக் குறைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புகையிலை பழக்கம்
அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம் முக்கியமானது:“மேற்சொன்னது எல்லாவற்றையும் விட, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுக்க வேண்டும். பத்து நாட்கள் புகைப்பிடிக்காமல் இருந்தால், அந்த உணர்வு குறையும். ஒரு மாதம் இருந்தால், புகைப்பழக்கமே இல்லாமல் போகும்!”
இத்தனை மெனக்கெடுவதை விட, புகையில் தடுப்புக்கு கோடி கோடியாக அரசு செலவு செய்வதைவிட, நான்கைந்து சிகரெட் ஆலைகளை நிறுத்திவிடலாமே என சிம்பிளாகத் தோன்றலாம். ஆனால், இங்கே அது சிம்பிள் அல்ல; சிரமப்பட்டாலும் நாம்தான் முனைந்து அப்பழக்கத்தை விட வேண்டும்.
ஏனென்றால், உயிர் நம்முடையது!