இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இறக்குமதி செலவை சமாளிக்க முடியாததால் சிமெண்ட் முதல் உயிர் காக்கும் மருந்து வரை அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்காக மக்கள் பல மணி நேரங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் உணவுப்பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல இயலவில்லை. காகிதத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்றதோர் நெருக்கடி ஏற்பட்டதில்லை எனவும், தாங்கள் தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலையில் அரசியல்வாதிகள் சொகுசாக வாழ்வதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இலங்கையில் கடும் நெருக்கடி; வங்கிகளின் வெளிநாடு நாணய இருப்பை கைப்பற்றும் அரசு!
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் ஜெனரேட்டர்கள் கிடைக்காததன் விளைவாக போதிய மின் உற்பத்தி இல்லாத காரணத்தால் நாளை முதல் 10 மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. சிலோன் மின் வாரியம் 12 மணி நேர மின் வெட்டுக்கு அனுமதி கோரிய நிலையில், 10 மணி நேர மின் வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சில பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், சில பகுதிகளில் மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் மின் வெட்டு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.