High court dismisses PIL to include concern officers in SP velumani corruption case: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் தொடர்புடைய காலத்தில் இருந்த சென்னை, கோவை மாநகராட்சி மேயர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்க்கக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
திமுக மற்றும் ஊழலுக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வேலுமணி உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், 2014-2018ம் ஆண்டில் அமைச்சரின் நெருங்கிய உதவியாளர்களுக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.700 கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான நேர்வழி இயக்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: தேர்தலில் தோற்கலாம்; சித்தாந்தத்தில் தோற்கலாமா? மார்க்சிஸ்ட் கட்சிக்கு வீரமணி கேள்வி
மேலும், “டெண்டர்களின் மதிப்பு மிகப்பெரியது என்பதால், மேயர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்திருக்க வேண்டும். எனவே, விசாரணையில் அவர்களை விட்டுவிட முடியாது. இருப்பினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படாமல் அதிகாரிகள் வெளியேறுவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும், மேயர்களையும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக்க, ஊழல் தடுப்பு இயக்குநரகத்திற்கு (டிவிஏசி) நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரரான நேர்வழி இயக்கம் தரப்பில் கோரப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “குற்றவியல் வழக்கின் செயல்முறையைப் புரிந்து கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட இத்தகைய பொதுநல வழக்குகளை அனுமதிக்க முடியாது” என்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் வழக்கை தள்ளுபடி செய்தது.