திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில், உலகப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தனம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் ஆகியோர்
சிறப்பு தரிசனம்
மூலம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக சலுகைகள் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினந்தோறும் ஆயிரம் பக்தர்கள் இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த செய்திடெய்லி மறக்காமல்.. இதை செய்து விடுகிறார் பிரதமர் மோடி.. ராகுல் காந்தி நக்கல்!