ஏப்.6 முதல் மே 10 வரை 22 நாட்களுக்கு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரையிலான 22 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் நடைபெறலாம் என்பதை உறுதி செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக ஒரு முடிவெடுக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல், மே மாதம் 10-ம் தேதி வரை துறை மானியக் கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடரை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெறும். கூட்டத்தொடரின் கேள்வி நேரம் மற்றும், விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளும் நேரலை செய்யப்படும். கூட்டத் தொடரின் முதல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வரும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டத்தொடர் நடைபெறாது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் 19-ம் தேதி 2022-23 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் அமர்வு கடந்த மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து வரும் மே 7-ம் தேதியோடு ஓராண்டு நிறைவடைகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. எனவே அன்றையதினம் முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.