தஞ்சாவூர்,- ”திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்; தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார்.
ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர, தமிழும் வளரும். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். பாரதியாரின் உரைநடை புத்தகங்களை படித்து, நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளை முழுமையாக படித்து விட்டால், உலகத்தையே படித்து விடலாம். கொரோனா காலத்தில், தமிழரின் வணக்கம் சொல்லும் முறையை, உலகமே பின்பற்றி வருகிறது.
இதனால், தமிழ் பண்பாடு, உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில், தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ்அண்ணா விருது பெற்ற ஒருவர், ‘இரு மாநிலங்களுக்கு, அவள் கவர்னராக உள்ளாள்’ என, என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.
இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம்! ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில், அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.
திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை.இவ்வாறு கவர்னர் பேசினார்.தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக, இவ்விழாவில் தமிழிசை பேசினார்.