கஞ்சா ஆபரேசன் 2.O மூலம், கடந்த 2 நாட்களில் நடத்திய சோதனையில், தமிழகம் முழுவதும் கஞ்சா வழக்கில் 350 பேர் கைதாகி உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. ‘கஞ்சா ஆபரேசன் 1.O’ என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை, தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 1.O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் நடத்தியது தமிழக காவல்துறை. கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வரை கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 8929 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 1,272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2.35 கோடி மதிப்பிலான 2299 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை கூறியுள்ளது. குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 8,142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7,708 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 5.31 கோடி மதிப்பிலான 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் இதுவரை 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 23 கோடி மதிப்பிலான 23 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 வை மீண்டும் கையில் எடுத்துள்ளது தமிழக காவல்துறை. இந்த மாதம் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 27.04.2022 வரை நடத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ச்சியாக இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் கடந்த 28, 29-ம் ஆகிய 2 நாட்களில் நடத்திய தீவிர கஞ்சா வேட்டையில், கஞ்சா வழக்கில் 350 பேர் கைதாகி உள்ளதாகவும், 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் கோவையில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை போன்று குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க காவதுறை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரிகளின் விற்பனையாளர் பதுக்கி வைப்போர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை தொடர்கிறது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தகவல் தரலாம். அதோடு தமிழ்நாடு காவல்துறையின் சமூக வலைதளங்களான முகநூல்: https://www.facebook.com/tnpoliceofficial, டிவிட்டர்: @tnpoliceoffl மற்றும் வாட்ஸ்ஆப்: 94981-11191 ஆகிய சமூக ஊடகங்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-செய்தியாளர் சுப்ரமணியன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM