யாரையாவது திட்டுவதாக இருந்தாலும் கூட அழகுத் தமிழில் மரியாதையாகத் திட்டுங்கள் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், அயல்நாட்டு கல்வித் துறை இலங்கை பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை, சென்னை வானவில் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின. இதை தொடக்கி வைத்து தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்
தமிழிசை
சவுந்தரராஜன் பேசியதாவது:
குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். பெண்கள் உயர்விற்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டு உள்ளோம். சமூக இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகுந்த பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனவே இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள்.
என்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைத்தளத்தில் ‘இரு மாநிலங்களுக்கு இவள் கவர்னரா’ என்று ஒருமையில் பயன்படுத்தி தெரிவித்திருந்தார். திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள். தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். தமிழை வணங்குவோம்; விமர்சனம் என்பது தமிழரின் பங்கு, ஆனால் அதை மரியாதை சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா இன்னும் முழுமையாக போகவில்லை. பல்வேறு நாடுகளில் நோய் தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. அதனால் பொது மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் முக கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
4வது அலை வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான்காவது வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன். 12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு கேட்கத் தெரியாது. அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நான்காவது அலை வருவதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை பொது மக்கள் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த செய்திஏப்ரல் 1 முதல்.. – ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!