டில்லி
ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்குக் கணிதம், வேதியியல் அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்களில் சேர தற்போது கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடங்கள் அவசியமாக இருந்தன. ஆனால் ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்கு கணிதம் உள்ளிட்டவை அவசியம் இல்லை என இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையொட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில்,
“கணிதம் பொறியியல் பிரிவில் உள்ள 3ல் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கட்டாயம் இல்லை. இதனால் 12ம் வகுப்பில் தொழில் கல்வி பயின்ற மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர முடியும். மேலும் கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு முதல் 2 பருவங்களில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் அடிப்படை கல்வி பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் கற்பிக்கப்படும்.
குறிப்பாகக் கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைப் போல் வேளாண்மை, கட்டிடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு, தோல் பதனிடுதல் படிப்புகளுக்குக் கணிதம் கட்டாயமில்லை”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.