கரூரில் சினிமா பட பாணியில் 3 இளைஞர்களை வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த வசந்த் (22), தர்மன் (23), வல்லரசு (23) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் வழக்கம்போல் கரூர் – கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு, அந்த மூன்று இளைஞர்களையும் ஓட ஓட சரமாரியாக விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர்.
சினிமா பட பாணியில் ஓட ஓட இளைஞர்களை வெட்டிய அந்த கும்பல் திடீரென்று தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தலைமறைவாகிவிட்டனர். மேலும், அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்து பதறிய அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், வெட்டுகாயங்களுடன் துடித்த அந்த மூன்று இளைஞர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். வசந்த், தர்மன், வல்லரசு ஆகிய 3 இளைஞர்களுக்கும் தலை, கை, கால்கள் என பல இடங்களில் அரிவாள் மூலம் வெட்டுக்காயம் ஏற்பட்டு, பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அந்த மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர காவல் நிலைய காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய மர்ம கும்பல் குறித்தும், இளைஞர்களுக்கும், அவர்களுக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.