சென்னை: செவிலியர்களை பணி நீக்கம் செய்வதை அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸ் நான்காவது அலை சீனா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமடைந்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தியாவில் கரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்று கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் கரோனா நான்காவது அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என உலக நல நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா நான்காவது அலை ஏற்பட்டாலும் , அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு தனது மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும், செவிலியர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், அதற்கு மாறாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை, மருத்துவர்களை, செவிலியர்களைப் பணி நீக்கம் செய்வது சரியல்ல. முக்கியமாக, கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் 3 ஆயிரம் பேரில், 2,500 பேருக்கு நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணிமாற்றம் செய்து பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 500 செவிலியர்களை நாளையுடன் பணியில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதோடு, செவிலியர்கள் மத்தியில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இந்த செவிலியர்கள் தங்கள் உயிரையும் துச்சமென கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவ சேவையாற்றினர். எனவே, 500 செவிலியர்களின் பணி சேவையை மதித்து, தற்போது பணிபுரிந்து வரும் பணியில் தொடர்ந்து சேவையாற்ற, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்செவிலியர்களையும் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணி மாற்றம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.