புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பாக பாஜ. இளைஞர் அணி (பிஜேஒய்எம்) நடத்திய போராட்டத்தின்போது, அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் உடைத்து தகர்க்கப்பட்டன. காஷ்மீர் பண்டிட்டுகளின் வாழ்வியல் சூழல் குறித்து விவரிக்கும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு டெல்லி அரசு வரி விலக்கு அளிக்க பாஜ. கோரிக்கை விடுத்தது. வரி விலக்கு தேவையெனில் ஒன்றிய அரசை அணுகும்படி, இம்மாநில துணை முதல்வர் சிசோடியா அறிவுறுத்தினார். இதனிடையே, `வேண்டுமானால் அந்த படத்தை இலவசமாக யூடியூபில் வெளியிடுங்கள்,’ என முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தி, டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பாக பாஜ இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது, வீட்டின் முன்பிருந்த சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள், வாகன தடுப்பு ஆகியவற்றை பாஜவினர் தாக்கி சேதப்படுத்தினர். மேலும், நுழைவு வாயில் இரும்பு கேட்டில் காவி நிறத்தை பூசிவிட்டு சென்றனர். இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சாகர்சிங் கால்சி தெரிவித்தார்.