கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஏப்ரல் 15 முதல் 25 வரை கோவில் விழா நடைபெறுகிறது. அப்போது கோவிலில் பல்வேறு இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதற்காக பிரபல கலைஞர்களை கோவில் நிர்வாகிகள் கோவிலுக்கு அழைப்பது வழக்கம். இந்த விழாவில் நடனமாட பிரபல முஸ்லிம் கலைஞரும், நடனத்தில் டாக்டர் பட்டம் பெற்றவருமான மான்சியா விருப்பம் தெரிவித்து இருந்தார். கோவில் நிர்வாகிகள் மான்சியா கோவிலில் நடனமாட அனுமதி மறுத்தனர்.
இதுதொடர்பாக மான்சியா சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில் கேரளாவில் உள்ள கோவிலில் நடனமாட எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். எனது நடனத்தில் திருப்தி இல்லை என்று கூறியிருந்தால் அதனை நான் ஏற்றிருப்பேன். ஆனால் கோவில் நிர்வாகிகள் கூறிய காரணத்தை ஏற்க முடியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
கேரள கோவிலில் மான்சியா நடனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, கலைக்கு சாதி, மதம் என்பது இல்லை. கலையை கலையாகவே பார்க்க வேண்டும். மான்சியாவின் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கூறப்பட்ட காரணத்தை ஏற்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.