புதுச்சேரி : புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.சாரம், காமராஜர் சாலையில் இருந்து சக்தி நகர் செல்லும் சாலை சந்திப்பில் இருந்த தி.மு.க., – அ.தி.மு.க., கொடி கம்பங்களை, போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக, நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
அதை கண்டித்து மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அ.தி.மு.க.,வினர் மதியம் 1:15 மணி அளவில் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தி.மு.க.,வினரும் மறியலில் ஈடுபட்டனர்.வெகு நேரமாக போராட்டம் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள், ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார்கள் குமரன், ராஜேஷ்கண்ணா, எஸ்.பி., பக்தவத்சலம், நகராட்சி பொறியாளர் நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர்.அகற்றிய கொடி கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று மறியல் கைவிடப்பட்டது.
Advertisement