சென்னை:
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு கிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டது.
அங்கு கிசிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறவும், அதே மருத்துவமனையில் தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்பு ஏற்படும் தாக்கங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அந்த தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்டவர்களிடம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் 5-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் தாக்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பொதுவாக உடலில் இன்சுலின் சுரக்கும் அளவு குறைந்தாலோ அல்லது இன்சுலின் சுரக்காத போதே நீரிழிவு நோய் உருவாகி விடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது சிறுநீரகங்களின் ரத்த நாளங்களை தாக்கி சேதப்படுத்தும் அபாயம் கொண்டது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 கொரோனா பாதிப்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது வயது வித்தியாசமின்றி நீரிழிவு தாக்கம் ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த 500 பேரில் 196 பேர் பெண்கள். இவர்களில் 92 பேருக்கு நீரிழிவு தாக்கம் உருவாகி இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இவர்களிடம் எப்படி நீரிழிவு நோய் உருவானது என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது நமது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பி செல்களை கொரோனா வைரஸ் தாக்கி அழிப்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவால் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஆளாகி இருப்பவர்களில் 47 பேர் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இவர்களில் 9 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கொரோனா வைரசால் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. 35 பேர் 50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதை விட கொரோனா பாதிப்பாளர்களுக்கு அதிகளவு உயர்ந்துவிட்டதை ஓமந்தூரார் மருத்துவமனை ஆய்வு உறுதிப்படுத்தி இருப்பதாக டீன் ஜெயந்தி தெரிவித்தார். மற்ற மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவுகள் வந்திருப்பதாக அவர் கூறினார்.
நீரிழிவு நோய்களில் பலவகைகள் உள்ளன. டைப்-1 எனப்படும் முதல் வகையில் சிறுவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். டைப்-2 என்ற 2-வது வகை நீரிழிவு பாதிப்பு, கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுவது ஆகும்.
கொரோனாவுக்கு பின்பு நீரிழிவு நோயால் தாக்கப்படும் அனைவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு பிரிவில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. என்றாலும், நீரிழிவுக்கு மிக முக்கிய மூலகாரணமாக அமைவது என்பதை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.
இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை கொரோனா வைரஸ் அழிப்பதை உலகம் முழுக்க உள்ள நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அதோடு கொரோனா பாதிப்பின் போது பயன்படுத்தும் மருந்துகளும் நீரிழிவு ஏற்பட ஒரு காரணமாகும் என்று பிரபல நீரிழிவு நிபுணர் டாக்டர் வி.மோகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவிய காலங்களில் அனைவரும் வீடுகளில் முடங்க நேரிட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். பலர் உடல் எடை கூடினார்கள். இத்தகைய காரணங்களும் நீரிழிவு நோய் வருவதற்கு ஒரு காரணமாக அமைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.