புதுடெல்லி: மத்திய அரசின் சமூக நீதித் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பி.க்களை பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14-ம் தேதி வருகிறது. பாஜகவின் நிறுவன நாள் ஏப்ரல் 6-ம் தேதி வருகிறது. ஏப்ரல் 6 முதல் 14-ம் தேதிவரை சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை பாஜக எம்.பி.க்கள் நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது.
பாஜக எம்.பி.க்கள் மக்களை, குறிப்பாக நலிந்த பிரிவினர், தாழ்த்தப்பட்ட மக்களை அணுகி அவர்களின் முன்னேற்றத்துக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சமூக நீதித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
பிரதமர்களின் பங்களிப்பு..
வீட்டு வசதி திட்டம், இலவசஉணவு தானியங்கள் வழங்கும் திட்டம் போன்றவை குறித்து மக்களிடம் பாஜக எம்.பி.க்கள் விளக்க வேண்டும். முன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஏப்ரல் 14-ல் திறக்கப்பட உள்ளது. நாட்டுக்கு கட்சி வேறுபாடு இல்லாமல்எல்லா பிரதமர்களின் பங்களிப்பையும் போற்றும் ஒரே கட்சி பாஜகதான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தத் தகவல்களை பாஜக எம்.பி.க்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.
– பிடிஐ