கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சிலுவை சங்கம் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், மரியப்போல் நகரில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் கட்டிடம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செஞ்சிலுவை சங்கத்தின் கொடியை குறிக்கும் வகையில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் கட்டிடம் மீது வண்ணம் பூசப்பட்டிருந்த போதும் ரஷிய படைகள் கட்டிடத்தில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.