சென்னையில் உள்ள கோயில் ஒன்று ‘பில்டிங் லிப்டிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்படியே தூக்கி உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இப்போது கோடை வாட்டி வதைக்கிறது. இதுவே மழைக்காலம் என்றால், சாலையில் வெள்ளம்போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடும். தெருக்களில் குட்டி குட்டி குளங்களும், ஊற்றுகளும் புதிது புதிதாக முளைக்கும். வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகும் அவலம் உண்டாவதால், மழைக் காலங்களில் சென்னை மக்கள் படும் துயரம் சொல்லிமாளாது. தாழ்வான பகுதிகளில் வீடுகள் அமைந்திருப்பது, மழைநீர் வீடுகளுக்குள் உடனடியாக புக முக்கியக் காரணம்.
இந்நிலையில் மழைக் காலங்களில் மழைநீர் புகுவது உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்கவும், அதேசமயம் தொன்மையும் மாறாமல் இருக்கும்பொருட்டு சென்னையில் உள்ள கோயில் ஒன்று நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூக்கி உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்த சபாபதிநகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சுமுக விநாயகர் ஆலயம். சற்று தாழ்வான பகுதியில் அமைந்திருந்த இக்கோயிலை ‘பில்டிங் லிப்டிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூக்கி உயர்த்தியுள்ளனர் கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள்.
ஹரியானாவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டுதான் கோயில் தூக்கப்பட்டுள்ளது. அதாவது கோயிலை தரைப்பகுதியில் இருந்து அப்படியே பெயர்த்தெடுத்து தூக்கியபின், அதன் கீழே ஓரளவு உயரத்திற்கு பில்லர் அமைத்து அதன்மேலே அப்படியே பெயர்த்தெடுத்த கோயில் பொருத்தப்படுகிறது. இதன்மூலம் கோயிலின் தொன்மை மாறாது. அதேசமயம் மழைக்காலம் உள்ளிட்ட சிறு சிறு தொந்தரவுகள் வரும் நேரங்களில், இனி கோயிலுக்குள் நீர் புகாமல் பாதுகாக்கப்படும்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM