சென்னை பெசன்ட் நகர், 22-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி கிருத்திகா. இவர் கடந்த 25-ம் தேதி 18-வது குறுக்கு தெருவில் நடந்துச் சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர், கிருத்திகா அணிந்திருந்த நான்கரை சவரன் தாலிச் செயினைப் பறித்துக் கெண்டு தப்பி ஓடிவிட்டார். அவனைப் பிடிக்க கிருத்திகா பைக்கை விரட்டினார். ஆனால் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். அப்போது உடனடியாக அந்த நபர் வந்த பைக்கின் பதிவு நம்பரை கிருத்திகா குறித்துக் கொண்டார். இதையடுத்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கிருத்திகா புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலீஸாரிடம் டிஎன் 23 சிஎல் 3679 என்ற பதிவு நம்பரில் வந்த நபர்தான் செயினைப் பறித்ததாக கிருத்திகா தகவல் தெரிவித்தார். அதன்அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட பதிவு நம்பரைக் கொண்ட பைக் எங்கெல்லாம் செல்கிறது என்பதை போலீஸார் கடந்த 25-ம் தேதி முதல் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பைக், பெருங்குடி கந்தன்சாவடி காந்தி தெருவுக்குச் செல்வதை போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக அங்குச் சென்ற போலீஸார், திவாகர் (26) என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் தங்கியிருந்த வீட்டின் மேல்பகுதியில் உள்ள தண்ணீர்தொட்டி அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செயினையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் கூறுகையில், “செயின் பறிப்பு சம்வத்தில் ஈடுபட்ட திவாகரின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் நெய்வேலி. பட்டதாரியான இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலத்தில் அவருக்கு வேலை பறிபோனது. குடும்ப கஷ்டம் காரணமாக வேலைத் தேடி சென்னை வந்த திவாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் பைக்கில் பல இடங்களுக்குச் சென்று வேலை தேடினார். அப்போதுதான் செயின் பறிக்க முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து செயின் பறிப்பது எப்படி என சமூக வலைதளங்களில் பதிவான வீடியோக்களையும் சில திரைப்படங்களையும் அவர் பார்த்துள்ளார்.
அதன்பிறகு சென்னை பெசன்ட் நகர் பகுதிக்கு பைக்கில் சென்ற திவாகர், தன்னுடைய முகம் தெரியாமலிருக்க ஹெல்மெட், முககவசத்தை அணிந்துக் கொண்டார். இந்தச் சமயத்தில் தெருவில் இரவு 9 மணியளவில் தனியாக ஒரு பெண் நடந்து வருவதைக் கவனித்த திவாகர், அவரைப் பின்தொடர்ந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உறுதிச் செய்து கொண்ட திவாகர், தனியாளாக அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். அந்தச் செயினை வீட்டின் மாடியிலிருந்த தண்ணீர்தொட்டியில் மறைத்து வைத்த திவாகர், வழக்கம் போல வேலை தேடி அலைந்துக் கொண்டிருந்தார்.
செயினைப் பறிக்கொடுத்த கிருத்திகா புகாரளித்ததோடு வாகனத்தின் பதிவு நம்பரையும் கூறியதால் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திவாகரைக் கைது செய்துவிட்டோம். முதல் தடவையாக குற்றச் செயலில் ஈடுபட்ட திவாகர், அந்தச் செயினை எப்படி விற்பது எனத் தெரியாமல் இருந்துள்ளார். திவாகரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். வேலை இல்லை என்ற காரணத்துக்காக இளைஞர்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது” என்றனர்.