சென்னை:
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளின் மண்டலக் குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடை பெற்றது.
சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சிகளின் மண்டல குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த மாநகராட்சி அலுவலகங்களில் இன்று காலை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் மண்டல குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி மண்டல குழு தலைவர் மறைமுக தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதில் 14 மண்டலங்களில் தி.மு.க.வினர் மட்டுமே போட்டியிட்டனர். இதனால் 14 மண்டல குழு தலைவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டலம்-1 (திருவொற்றியூர்)- தி.மு.தனியரசு, மண்டலம்-2 (மணலி)-ஏ.வி. ஆறுமுகம், மண்டலம்-3 (மாதவரம்)-எஸ்.நந்தகோபால், மண்டலம்-4 (தண்டையார்பேட்டை)- நேதாஜி யு.கணேசன், மண்டலம்-5 (ராயபுரம்)- பி.ஸ்ரீராமுலு, மண்டலம்-6 (திரு.வி.க.நகர்)- சரிதா மகேஷ்குமார், மண்டலம்-7 (அம்பத்தூர்)-பி.கே.மூர்த்தி, மண்டலம்-8 (அண்ணாநகர்) -கூபி ஜெயின், மண்டலம்-9 (தேனாம்பேட்டை)- எஸ். மதன்மோகன், மண்டலம்-10 (கோடம்பாக்கம்)-எம்.கிருஷ்ணமூர்த்தி, மண்டலம்-11 (வளசரவாக்கம்)-நொளம்பூர் வே.ராஜன், மண்டலம்-12 (ஆலந்தூர்)-என்.சந்திரன், மண்டலம்-13 (அடையார்)- ஆர்.துரைராஜ், மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்)- வி.இ.மதியழகன் ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ஏகமனதாக வெற்றிபெற்றனர்.
14-வது மண்டலம் பெருங்குடியில் தி.மு.க. வேட்பாளராக பெருங்குடி எஸ்.வி. ரவிச்சந்திரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சதீஷ் குமார் போட்டியிட்டார். இந்த மண்டலத்தில் மொத்தம் 11 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் 8 பேர் தி.மு.க. கவுன்சிலர்கள். மீதமுள்ள 3 பேர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். இதையடுத்து இங்கு மண்டல குழு தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரும் ஓட்டு போட்டனர். இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சதீஷ்குமார் ஓட்டுக்களை எண்ண எதிர்ப்பு தெரிவித்தார். மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுபோடும் போது செல்போன் மூலம் படம் எடுத்ததாகவும், எனவே இதை மறைமுக தேர்தலாக கருத முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சதீஷ்குமாரிடம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டார். மேலும் அது தொடர்பான ஆதாரங்களை தருமாறும் கூறினார். சதீஷ் குமார் விளக்க கடிதம் கொடுத்ததுடன் ஆதாரங் களையும் ஒப்படைத்தார்.
இதையடுத்து 14-வது மண்டலத்தில் மண்டல குழு தலைவரை தேர்வு செய்ய 2-வது முறையாக மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிந்ததும் ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் 8 வாக்குகள் பெற்று மண்டல குழு தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சதீஷ் குமாருக்கு 3 ஓட்டுகளே கிடைத்தன.
இதையும் படியுங்கள்… மோடியின் தினசரி வேலையில் இடம் பிடித்தவை என்னென்ன?- பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்