டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு தீன் மூர்த்தி எஸ்டேட்டில் நினைவு இல்லம் உள்ளது. நேருவின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் அந்த நினைவு இல்லத்தில் உள்ளன.
நேருவின் தியாகத்தை அந்த நினைவு இல்லம் பிரதிபலிப்பது போல முன்னாள் பிரதமர்கள் அனைவரது தியாகத்தையும் பிரதிபலிக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டார். இதையடுத்து தீன் மூர்த்தி வளாகத்தின் ஒரு பகுதியில் முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் மியூசியம் ஒன்று கட்டப்படும் என்று அவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தார்.
அதன்படி ரூ.271 கோடி செலவில் 10,975.36 சதுர மீட்டர் பரப்பளவில் முன்னாள் பிரதமர்கள் மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மியூசியத்தில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியத்தை வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்த தினம் தொடங்குகிறது. அதன் தொடக்கமும் அந்த விழாவில் நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர்கள் மியூசியம் மூலம் நாட்டுக்காக உழைத்த அனைவரின் தியாகத்தையும் ஒரே இடத்தில் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… 2024 பாராளுமன்ற தேர்தல்- காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க பிரசாந்த் கிஷோர் முடிவு