புதுடெல்லி:
காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய கருத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் பைல்ஸ் படத்தை பாஜக விளம்பரப்படுத்துவதாகவும் கெஜரிவால் சட்டசபையில் கடுமையாக சாடினார்.
இந்நிலையில், இன்று கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் சிலர் வந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், முதல்வர் கெஜ்ரிவாலை கொல்வதற்கு பாஜக சதி செய்வதாக குற்றம்சாட்டினார்.
‘டெல்லி போலீசார் முன்னிலையில், டெல்லி போலீசாருடன் இணைந்து பாஜக குண்டர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு வந்துள்ளனர். முதல்வரின் வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டன. பாதுகாப்புச் சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் டெல்லி போலீஸ் முன்னிலையில் பாஜக குண்டர்கள் நடத்தியுள்ளனர்’ என்றார் சிசோடியா.