மதுரை: தஞ்சாவூர் மாநகராட்சி திமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி 16-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சி 16-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஜன. 28 வரை மாநகராட்சிக்கு நான் எந்த நிலுவைத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. வேட்புமனு தாக்கலில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தும் முறையாகவே நடைபெற்றது. அப்போது என் மீது யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு என் சகோதரர் மாநகராட்சி ஒப்பந்தங்கள் எடுத்ததை வேட்புமனுவில் மறைத்ததாக புண்ணியமூர்த்தி, குமார் ஆகியோர் புகார் அளித்தனர். நானும், சகோதரரும் தனித்தனியாக வசிக்கிறோம். இருவருக்குமு் இடையே தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக எந்த தொடர்பும் இல்லை.
இது குறித்து நானும், என் சகோதரரும் உரிய விளக்கம் அளித்தோம். இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்தும், இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். பின்னர், தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவியிலிருந்து மனுதாரரரை தகுதி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் மீதான புகார் குறித்து மாநகராட்சி ஆணையர் ஏப்ரல் 6 முதல் 8 வாரத்திற்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.