தஞ்சாவூர் 16வது வார்டு திமுக கவுன்சிலரை தகுதிநீக்கம் செய்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
தஞ்சாவூர், கரந்தட்டாங்குடியை சேர்ந்த பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தஞ்சாவூர் 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றேன். கடந்த ஜனவரி 28ஆம் தேதி வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை என எதுவும் இல்லை. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கலிலிருந்து, வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டது. அப்போது, என் மீது யாரும் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், புண்ணியமூர்த்தி மற்றும் குமார் ஆகியோர் திடீரென நான் வெற்றிபெற்ற பின்னர் அது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தனர். எனது சகோதரர் மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் எடுத்திருப்பது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். எனது சகோதரரும் நானும் தனித்தனியாக வசிக்கும் சூழ்நிலையில் இருவருக்கும் இடையே தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வித தொடர்பும் இல்லை. இது தொடர்பான விசாரணையில் நேரில் எனது விளக்கத்தை தெரிவித்தேன். இதுகுறித்து எனது சகோதரர் விசாரிக்கப்பட்டு அவருடைய தரப்பு விளக்கத்தையும் தெரிவித்தார்.
இந்த நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி என்னை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதனை ஏற்க இயலாது. ஆகவே கவுன்சிலர் பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், இந்த உத்தரவை ரத்துசெய்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “தஞ்சாவூர் 16வது வார்டு கவுன்சிலர் பதவியிலிருந்து மனுதாரரை தகுதி நீக்கம் செய்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார். மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8 வாரத்திற்குள்ளாக தஞ்சாவூர் 16வது வார்டு கவுன்சிலர் மீதான புகார் குறித்து மீண்டும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM