தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது : சூரி பேட்டி
சென்னையை அடுத்த சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னணியில் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார் சூரி. அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛‛என்னுடைய இந்த வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் பண விவகாரத்தில் நம்பி ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கில் முதலில் அடையாறு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது. திருப்திகரமாக விசாரணை நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். அதையடுத்து தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடக்கிறது.
இதுதொடர்பாக இன்று விசாரணைக்கு வந்துள்ளேன். நிச்சயமாக எனக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி பதில் கொடுத்து வருகிறேன். கட்டாயமாக தப்பு செய்தவர்கள் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சூரி. மேலும் சூரி தன்னிடம் பண மோசடி செய்ததற்காக புகார் அளித்துள்ள முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.