டெல்லி சட்டமன்ற கூட்டத்தின் போது `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ” தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு செய்யுங்கள் என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்கள். இந்த திரைப்படம் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என விரும்பினால் யூடியூபில் போடுங்கள். அனைவரும் இலவசமாகப் பார்ப்பார்கள். காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் போஸ்டர் ஒட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள். எனவே செய்து கொண்டிருக்கிறீர்கள்” எனப் பேசினார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பா.ஜ.க இளைஞர் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா தலைமையில் பா.ஜ.க-வின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் வீட்டின் முன் கதவு மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் உடைக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா “பா.ஜ.க குண்டர்களால் முதல்வரின் வீட்டின் முன் கதவு மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.